Thursday 5 November 2015

1. சிறு பிராயமுதல், வாழ்க்கையின் விளிம்பு வரை - பக்கம் 1

நான் 13 பேர்களுடன் பிறந்தேன்.  அதில் கல்யாணவயதை அடைந்தவர்கள் 9 பேர்கள் 7ஆணகளும், 2 பெண்களும்.என் தந்தை பிள்ளைகளைப்படிக்கவைத்து,  வேலைக்கு அனுப்பினார், பெண்களை சிறுவயதிலேயே கல்யாணம் செய்து கொடுத்து விட்டார். பிள்ளைகளை படிக்க வைப்பதே பெரிய காரியமாய் இருந்தது போலும். இவ்வளவு பெரிய சம்சாரத்தில் பிள்ளைகளைப்படிக்க வைத்து, வேலை வாங்கிக்கொடுத்து, பெண்களை கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்றால் சாமான்யமல்ல, அதற்கு அவர்களுக்கு. ஒரு பொற்கோயில் கட்டினாலும் தகும்!!!  என் அக்காவை என் ஒன்றுவிட்ட மாமா பிள்ளைக்கும், என்னை, என் அக்காவின் சிபார்சில் ஒரு BA Hons பட்டதாரிக்கும் ,கல்யாணம் செய்து கொடுத்தார்கள். என் கணவர் கிருஷ்ணமூர்த்தி கடைசி வருடம் BA Hons படித்துக்கொண்டருந்தார். காதில் கடுக்கனும், கட்டுக்குடுமியமாய் இருப்பார் பிள்ளை ரொம்ப லக்ஷணம் என்று சொல்லிக்கொண்டார்கள். ஆனால் கர்னாடகமாய் இருக்கிறாரே என நான் வருந்தியதுண்டு. ஆனால் பிற்காலத்தில், இப்பேற்பட்ட உலக மேதையையா அப்படி நினைத்தோம்  என்றும் வறுந்தியதுண்டு (சந்தோஷத்தில்)!!என் அம்மா கடைசிபெண்ணான என்
கல்யாணம் முடிந்ததும், நான் என் முதல் குழந்தை பத்மாவை வயிற்றில் சுமந்துகொண்டிருந்த சமயம், தன் கடமை முடிந்தது என இறந்துவிட்டார்

               கிருஷ்ணமூர்த்தி ( VK) தான் வேலை பார்க்கும் சிதம்பரத்தில் univercity க்குள் வீடு கிடைக்காமல் பின் வெளியில் வீடுபார்த்து, என்னையும் குழந்தை பத்மாவையும் அழைத்துக்கொண்டார்
எங்களுடன் தன் அப்பாவையும், சித்தியையும், (அம்மாவின் தங்கை)' கூட அழைத்துப்போனார்.அப்பொழுது எனக்கு பாத்திரம், பண்டம் ஜாஸ்த்தி இல்லை.என் கல்யாணத்துக்குக்கொடுத்த சொல்ப பாத்திரத்திரந்தான்.
ஒரு சாக்கு மூட்டை பாத்திரம்,
ஒரு சாக்கு மூட்டை புஸ்த்தகம் ,ராமர் படம், பூஜைப்பெட்டி. இது தான் எங்கள் சொத்து. எங்கு போனாலும் எங்கள் குலதெய்வமான ராமர் படமும்  ராஜராஜேஸ்வரி விக்ரஹமும். கூடவே துணைவருவார்கள்.(இன்றுவரை அவர்கள்தான் எங்களை ரக்ஷப்பவர்களும்கூட)

            சிதம்பரத்தில் என் கணவர் பார்த்த வீட்டுக்கு வந்தோம். அதில் கால் வைத்ததும் எனக்கு அதில் எப்படி குடித்தனம் செய்யப்போகிறோம் என்று தூக்கி வாரிப்போட்டது.  ஒரு பெரிய கூடத்தில் பல அறைகள் , அதில் பல குடுத்தனங்கள்,privacy என்பது கிடையாது .சாப்பிடும்போது
எல்லாக்குடித்தனங்களும் பார்க்கும்படி இருக்கும். அவர்கள் சாப்பிடும்போதும் அப்படியேதான்.    தவிர நாங்கள் வந்த மறு நாள் வீட்டுக்கார அம்மாள் என்னைக்கூப்பிட்டு, கிணற்றில் நீர் இறைக்க அவரவர் தாம்புக்கயர்தான் போட்டு நீர் இறைக்க வேண்டும் என்றும், பின் அவரவர்    
கழட்டிக் கொள்ளலாம் என்றும் சொன்னாள். எனக்கு பக்கென்றது. 10 நாள் சென்ற பின் மாமியை Friend பண்ணிக்கொண்டபின் நான் மாமியிடம் என் யோஜனையைச் சொன்னேன்.அதாவது,  நாம் ஒருவர் தாம்புக்கயிர் போடுவது, அது இத்துப்போனபின் , அடுத்தவர் வாங்கிப்போடுவது என்று என் யோஜனையைச் சொல்ல, மாமியும் என் பேச்சுக்கு, சம்மதித்தாள். நாட்கள் ஓடின, அங்கு மூன்று மாதம் இருந்தோம்.  பின் ஆறுபட்டை  வீடு என்ற பெரிய வீட்டுக்கு வந்தோம். அங்கு கீழே ஒரு குடித்தனம் , மேலே வீட்டுக்காரமாமியும், இன்னொரு குடித்தனமும். ஆக ஒரு வீட்டில் நாலு குடித்தனம். முந்தய வீட்டுக்கு இது எவ்வளவோ தேவலை. வீடும் கொஞ்சம் modern ஆக இருந்தது அதில்தான் என் பெண் பத்மா எல்லோருக்கும் செல்லக்குழந்தை. அந்த வீட்டில் ஆறு மாதம் இருந்திருப்பேன். பின் நான் பிரஸவத்திற்கு என் பிறந்தவீடு சென்றேன். எனக்கு     இரட்டைக்குழந்தை பிறந்து, என் முதல் குழந்தை பத்மாவுடன் சேர்ந்து ஆக மூன்று குழந்தைகளுடன் என் வீட்டிற்கு என் அப்பாவுடன் வந்தேன். அப்பொழுது என் கணவர் என்னை வரவேற்க surprise ஆக இருக்க நினைத்து, முதல் ரயிலில் ஏறி, பின் நான் வரும் ரயலில் ஏறி எங்களுக்குத் தெரியாமல், எங்களை அதே வண்டியில் பார்த்து, எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த நினைத்து, பின்  சற்றே கண் அயர்ந்திட,இறங்க வேண்டிய ஸ்டேஷனைக்கோட்டை விட்டு, அடுத்த ஸ்டேஷன்வரைபோய் இறங்கி பின் வீடு வந்தது ஒரு தனிக்கதை.!!

                        பின் அந்த வீட்டில் 10மாதம் இருந்தோம், முதல் குழந்தையுடனும்,
இரட்டைக்குழந்தைகளுடனும், பாடுபட்டாலும், அதில் தாய்மையின் சுகம் இருந்தது என்னமோ உண்மைதான். அந்தக்கடவுள் நான் படும் பாட்டைப்பற்றி அநுதாபப்பட்டாரா, அல்லது என்னை அவஸ்த்தைக்குள்ளாக்கி ,ஆனந்தப்பட்டாரா என அந்தக்கடவுளுக்குத்தான் தெரியும்!!  நாலுநாளில் இரட்டையர்களில் ஒரு குழந்தையை நான் இழக்க வேண்டியிருந்தது.
ஆம், ரத்த பேதி வந்து காலன் பறித்துக்கொண்டுவிட்டான். அப்பொழுது பறிகொடுத்த தாய் அலறி  அழ,குழந்தையின் தகப்பனார் வேலையில் வேறு ஊரில் இருக்க,தான் அவர் முடியாத நிலையில் தகப்பனார் தவிக்க, குழந்தையைப்புதைக்க வேண்டிய நிலை அந்த தாய்க்கு .
இதை விதி என்று சொல்வதா  இல்லை கடவுளின் சதி என்று சொல்வதா?  அந்த கடவளுக்குத்தான் வெளிச்சம்.

            பின் மதுரைக்குக் குடித்தனம் மாற்றப்பட்டது. அதுவும் அவசரத்தில் , வாடகைக்குறைவில் வேண்டுமானால் எப்படிக்கிடைக்கும் ? ஒரு சமையல் உள்ளில் வீட்டுக்கார மாமியும்  நானும் பாதி பாதி சமையல் உள்ளில் சமைப்போம். ஒரே கூடத்தில் இரு குடும்பமும் சாப்பிடுவோம். மாடியில் படிப்பதற்கும் படுப்பதற்கும் ஒரு அறை உண்டு. அதில் மூன்று மாதம் இருந்தோம். பின் ஆதிமூல அக்ரஹாரம் என்ற  இடத்தில் அதே வாடகையில் தனி portion வீடு கிடைத்து .         அங்கு பத்து மாதம் இருந்தோம். கடவுள் அல்லாடும் தம்பதிகளுக்கு கஷ்டம் வேண்டாம் என நினைத்தாரோ என்னமோ , கட்டியால் அவஸ்த்தை பட்டுக்கோண்டிருந்த இன்னொரு குழந்தையையும்
பறித்துக்கொண்டார்.
  (தொடரும்)

           



















.

No comments:

Post a Comment